mercredi 11 novembre 2015

மருதங்கேணி கந்தசாமியார் கோவில்.

அழகிய அலைமோதா ஆறு அருகினிலும்,  அலைமோதும் ஆழி அண்மையிலும், சிறு மலைபோல ஆற்றங்கரையில் அரணாக இருக்கும் மண் பிட்டியும் அமைந்திருக்க,  நீண்ட வளமான  வயல்களும், வயல் நடுவே வட்டமான பல குளங்களும் ஆங்காங்கே பயிர்கள் பசுமை பெற அமைந்து இருக்க, கனிவளம் கொண்ட வெண்மணல் காடும், வடிவான வடிவமைப்புடைய வாய்க்கால்களைக் கொண்ட நீர் தேங்கா தரவை நிலத்தே தென்னையும், பனையும் தேங்கி இருக்க ஆலும், அரசும், அத்தியும், இத்தியும், மாவும், மருதும், வேம்பும், புளியும் விருட்சம் பெற்றிருக்கும் கிராமம்தான் மருதங்கேணி.  மொத்தத்தில் இது சங்க காலத்தில் இருந்த நிலங்கள்போல வயலும் வயல் சார்ந்த இடமுமான மருதமும்,   மணலும் மணல்சார்ந்த இடமுமான பாலையும்,  கடலும் கடல் சார்ந்த இடமுமான நெய்தலும்,  காடும் காடு சார்ந்த இடமுமான முல்லையும், என நால்வகை நிலங்கள்போல பரந்தமைந்து விளங்குவது பெருமைக்குரியது. இப்பெருமைக் குரிய இடத்தில் பெரும் நிலத்தை சொந்தமாக கொண்ட தலமாக கந்தசாமியார் ஆலயம் அமைந்துள்ளது.  இது ஓர் பெருமை மிக்க  தலமாகும்.  இத்தலத்தில் வீற்றிருக்கும் எம்பொருமான் கந்தசாமிக் கடவுளை நாடியோரெல்லாம் நலம் பெற்றார். தீவினைகளன்று செம்மை பெற்றார். செல்வங்கள் பெற்றுச் சிறப்புற்றார்.

முன்னெரு காலத்தில் ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட இத்தலம்,  பிராமணர்களால் இருகால நித்திய பூசைகள் செய்யப்பட்டு, வருடத்தில் வரும் தை மாதம் தொடங்கி மார்கழி மாதம் வரையுள்ள அனைத்து விசேட பூசைக‌ளும் சிறப்பாக செய்யப்பட்டு வந்தது. இதில் மாசிமகம், சிவராத்திரி, ஆனி மாதத்தில் வரும் பத்து திருவிழாக்கள், கந்தசட்டி, கார்த்திகை விளக்கீடு, திருவெம்பாவை போன்றவை வெகுசிறப்பாக நடைபெறும். மாசிமகத்திற்கும், தீர்த்தத் திருவிழா உற்சவத்திற்கும் கந்தப்பெருமானை பக்தர் கூட்டம் சமுத்திரம் வரை தோழிலே சுமந்து சென்று தீர்த்தமாடி வருவார்கள். முருகப்பெருமான் தீர்த்தமாடும் காட்சியை கடலோரப் பகுதியில் வாழும் மக்களும் சேர்ந்து நின்று தரிசித்து அருள் பெறுவர்.
தீர்த்தமாடியபின் முருகப்பெருமான் கடற்கரைப்பிள்ளையார் கோவிலில் தங்கி, இளைப்பாறி அங்குள்ள பக்தர்கட்கு அருள் பாலித்து இருப்பிடம் திரும்பும்பும் வழியில் மடத்தடி பிள்ளையார் கோவிலில் மீண்டும் இளைப்பாறுவார்.  அங்கு தேடிவரும் பக்தர்கட்கெல்லாம் அருள் பாலித்து மீண்டும் இருப்பிடம் நோக்கி வரும் வழியெல்லாம் குவிந்திருக்கும் பக்தர் கூட்டங்களுக்கு தன் திருக்காட்சியைக் காட்டி அருள் பாலித்து, வழி நெடுக தண்ணீர் பந்தல் அமைத்து பக்தர் தாகத்தையும் பசியையும் தீர்க்கும் அடியவர்கட்கும் அருள் புரிந்து இருப்பிடம் வந்து சேருவார்.  

ஆனிமாதத்தில் பத்து நாட்கள் முருகப்பெருமானுக்கு வெகு சிறப்பாக
திருவிழா நடைபெறும். அக்காலத்தில் ‌ஐந்தாம் திருவிழாவிலிருந்து
சகடையில் புறவீதி வலம் வரும் முருகப் பெருமானை, பக்தர்கள்
கூட்டம் புடைசூழ சைவப்பள்ளிக்கூட மாணவர்கள் தேவார,
திருவாசகங்களை நிரையாக நின்று பாடிவரும் காட்சி கண்டோர் மனதில்
இன்றும் இருக்கும்.

வேட்டைத் திருவிழாவின் விசேடம் மிகச்சுவையானது. வேட்டைத்
திருவிழாவன்று முருகப் பெருமான் அயல்கிராமம் சென்று
வேட்டையாடித் திரும்பும்போது, வள்ளிக்குறத்தியை மணம்
முடித்துக்கொண்டு இருப்பிடம் தேடித் திருத்தலம் வருவார். வள்ளியுடன்
வருவதையறிந்த தெய்வயானை கோபத்தோடு ஆலய நுழைவாயிலில்
வந்து முருகப்பெருமானுடன் தர்க்கம் செய்வார். அப்போது முருகப்
பெருமான் தெய்வயானைக்கு வள்ளியினுடைய முற்பிறப்பின்
உண்மைக்கதையைச் சொல்லி சாந்தம்பெற வைப்பார். அதன்பின்
தெய்வயானையார் வள்ளியை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வார். பின்
முருகப் பெருமான் வள்ளி தெய்வாயானை சமோதரராய் கோவிலுக்குள்
செல்லும் காட்சி என்றும் கண்டோர் மனதில் காலம் கடந்தும்
மகிழ்வளிப்பதாகும்.

மறுநாள் முருகப் பெருமான் தேரேறி அழகுடனே திருவீதி வழியாக
வலமாக வருகையிலே, உளம் மகிழும், உள்ளுணர்வில் முருகனது அருள்
பெருகும். அதையெல்லாம் விபரிக்க மொழியில்லை, உணர்ந்தோர்கள்
உணர்வர்.

இங்கு கந்தசட்டி விரதம் வெகு சிறப்பாக நடைபெறும். பல கிராமங்களிலிருந்து விரதம் அனுட்டிக்கும் பக்தர்கள் இவ்வாலயத்துக்குவந்து, ஆறுநாட்கள் தங்கியிருந்து, உபவாசம் செய்வார்கள். ஆறாம் நாள், பெரும் வீதிகளைக்கொண்ட இத்தலத்தில் சூரன்போர் ‌மகா சிறப்பாகநடைபெறும். இந் நிகழ்வைக் கண்டு களிப்பதற்காக பல ஊர்களிலுமிருந்து பக்தர்கள் திரண்டிருப்பர். சூரனைத் துாக்கி மண்டியிட்டு, அம்பெய்து,
உடல்பிரித்து, குறுக்கும் நெடுக்குமாக ஓடி, சாகசங்கள் செய்து,
வாணவேடிக்கைகள் காட்டி, நடாத்தப்படுகின்ற அந்நிகழ்வை யாராலும்
எளிதில் மறந்துவிட முடியாது. மறுநாள் காலை அன்னதானத்துடன் உபவாசம் முடிவடையும்.

இத்தலத்தின் சிறப்புக்களில் இக்கோவிலில் உள்ள கண்டாமணி
ஓசையையும் குறிப்பிட்டாக வேண்டும். இக்கோவிலின் மணியோசை பல
மைல் துாரத்துக்கு கேட்கும். அது பாவிகள் மீது ஆண்டவன்காட்டும்
பாசத்தின் ஓசையாக ஒலிக்கிறது. என்றும் முருகப்பெருமான் எம்முடன்
இருக்கிறார் என்று ஒரு தென்பு பிறக்க அது ஒலிக்கிறது.

இவ்வாறான சிறப்புகளுடன் எம் ஊர்மக்களின் சர்வ ஆதாரமாக இருந்த
எமது ஆலயம் கொடிய யுத்தத்தின் காரணமாக முற்றாக அழிக்கப்பட்டு
தரைமட்டமாக்கப் பட்டிருந்தது. மீழக்குடியமர்த்தப்பட்டபின் எமதுார்
மக்களும், அயல் கிராம மக்களும் இவ்வாலயத்தின் நிலைகண்டு மனம்
நொந்ததன் விழைவாக, இத்தலத்தை மீண்டும் பழமைபோல சிறப்பாக
ஆகம விதிப்படி அமைத்து, தினந்தோறும் நித்திய பூசைகளும், விசேட
பூசைகளும், செய்து மக்கள் அருள் பெறவேண்டுமென்று நினைத்ததன்
பொருட்டு, இதற்காக திருப்பணிச் சபையொன்றை உருவாக்கி, திருப்பணி
வேலைகளைச் செய்து வருகின்றோம்.

முருகப் பெருமான் துணையுடன் எல்லாமுயற்சிகளும் கைகூடும் என்ற
தளராத நம்பிக்கையுடன் அடுத்த ஆண்டு (2016) கும்பாபிசேகம் செய்ய
எண்ணியுள்ளோம். முருகப்பெருமானின் அருளை உணர்ந்த அடியார்கள்,
முருகப்பெருமானின் அருளை அடைய விரும்பும் அடியார்கள்,
இத்திருப்பணியில் பங்குகொள்ள விரும்பினால் கீழ்க்காணும் வங்கி
கணக்கு இலக்கத்துக்கு உங்கள் பங்களிப்பை அனுப்பி உதவலாம்
எனக்கேட்டுக் கொள்கிறோம்.

வங்கி கணக்கு இலக்கம்:

K.GNANASEGARAM
BANK OF CEYLON
A/C.NO-75652487

BCEYLKLX
028 POINT PEDRO



இத்திருப்பணி சம்பந்தமான தொடர்புகளுக்கு:

ஞானசேகரம் - கந்தப்பு 00 94 777803394


யெயசோதி - வல்லிபுரம் 00 33 753324528




Aucun commentaire:

Enregistrer un commentaire